காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும். இதனையடுத்து கோவில் வளாகத்தில் இருக்கும் நவராத்திரி மண்டபத்தில் மாலை நேரத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளி தினமும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அங்கு மாலை நேரத்தில் புகழ்பெற்ற இன்னிசை கலைஞர்களால் நாள்தோறும் பாட்டு, மாண்டலின், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, சிறப்பு தவில், நாதஸ்வரம் போன்ற கச்சேரிகள் நடைபெறுகிறது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு வருகிற 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை தினமும் காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தில் இருக்கும் ஸ்ரீ சக்கரத்திற்கு நவ ஆபரண பூஜை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். அந்த நேரத்தில் கோவில் கருவறை மூடப்பட்டு ஒரு மணிக்கு கோவில் நடை திறந்து நவாபரண பூஜையின் சிறப்பு பிரசாதமான சங்கு தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.