சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாரிசு, துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால் சச்சரவுகளை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று காலை ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ங்களிலிருந்து ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர்.. மேலும் அந்தந்த மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக எந்த மாதிரியான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அவர்களிடம் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் கேட்டு தகவல்களை வாங்கியுள்ளார்..
அதன் பிறகு மதியம் அவர்கள் அனைவருக்கும் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. மட்டன் பிரியாணி வழங்கப்பட்ட போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பரிமாறப்பட்ட பிரியாணியை நடிகர் விஜயும் தனது வீட்டிற்கு வரவழைத்து சாப்பிட்டுள்ளார்.. அதன் பின் வீட்டில் இருந்து தனது இனோவா காரில் கிளம்பி வந்த விஜய் இங்கு இருக்கக்கூடிய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டு பின் ஆலோசனை நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார்..
அதாவது, தொடர்ந்து சமீபகாலமாக பார்க்கும்போது வருங்கால முதல்வர் என்றெல்லாம் விஜய் குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டு போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவை வைக்கப்படும் சூழ்நிலையில், இதுபோல அரசியல் ரீதியான போஸ்டர்கள், அரசியல் வசனங்கள் இடம் பெறக்கூடிய நாளைய முதல்வரே போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் ஆகியவை இடம் பெற வேண்டாம். கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். நமது செயல்பாடுகள் அனைத்தும் அன்னதானம் மற்றும் ரத்ததானம் என விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்னெடுக்கக்கூடிய பொது நலத்திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்க வேண்டுமே தவிர, மற்றபடி தேவையில்லாத சச்சரவுகள், சமூக வலைதளங்களில் மற்ற தரப்பினருடன் எந்தவித சண்டையிலும் ஈடுபட வேண்டாம்.
வாரிசு படம் வெளியாக்கும்போது கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு பிரச்சனை ஏற்படும் அளவிற்கு எந்த கொண்டாட்டங்களும் இருக்கக் கூடாது. அதே சமயம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்றவர்களுடன் சண்டையில் ஈடுபட வேண்டாம் எனவும், மிகவும் கண்ணியத்துடன் சமூக வலைதளங்களில் நடந்து கொள்ள வேண்டும் என தனது ரசிகர்களுக்கு, மிக முக்கியமாக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்..
மேலும் வாரிசு திரைப்படம் வெளியாகும் போது பேனர்கள் வைப்பது, போஸ்டர் வைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபடும்போது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாதபடி இருக்க வேண்டும் எனவும், இவ்வளவு நல்ல விஷயங்களை மக்களுக்கு செய்யக்கூடிய நாம் மக்களுக்கு தொந்தரவு கொடுத்து கெட்ட பெயர் வாங்க கூடாது என ஆலோசனை கூட்டத்தில் இடம்பெற்ற ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடிகர் விஜய் அறிவுரை வழங்கிவிட்டு டாடா காட்டிவிட்டு அவரது காரில் கிளம்பி சென்றுள்ளார்..
ஏனென்றால் வாரிசு வெளியாகும் அன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிர்வாகிகளுடன் ரசிகர் மன்றம் சார்பாக படம் பார்க்க போகிறார்கள். அப்படி படம் பார்க்கும்போதும் அந்த படத்தை பார்த்துவிட்டு சண்டைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாரிசு, துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகதால் சச்சரவுகளை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளார்.