தமிழகத்தில் அதிக வருமானம் வரும் பெரிய கோயில்களுடன் வருமானம் இல்லாத சிறிய கோயில்களை இணைப்பது தொடர்பாக 15 நாட்களுக்குள் விரிவான அறிக்கை அனுப்ப அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஆனால், வருமானம் இல்லாத கோயில்களை கண்டுகொள்ளவே ஆட்கள் இல்லை. ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது. பல கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் பூட்டி கிடக்கிறது.
இதில், நூற்றாண்டு பழமையான 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் அடக்கம். இந்த நிலையில், வருவாய் இல்லாத கோயில்களில் அர்ச்சகர், தூய்மை பணியாளர்களை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின்படி, நியமனம் செய்ய ஆணையர் குமரகுருபரன் முடிவு செய்துள்ளார். இதற்காக, அதிக வருமானம் வரும் பெரிய கோயில்களுடன் சிறிய கோயில்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய கோயில்களுக்கு தேவையான நிதி வழங்க முடியும்.