தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக சினிமா உதவி இயக்குனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மேற்கு மாம்பலம் பகுதியை விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனை அடுத்து அந்த நபர் விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சென்னை கோடம்பாக்கம் ராஜாராம் திரைப்பட இயக்குனர்கள் காலனியில் வசிக்கும் விஜய்பாபு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சினிமா உதவி இயக்குனரான விஜய்பாபு வாய்ப்பு கிடைக்காததால் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் வழிப்பறியில் ஈடுபட்டதாக விஜய்பாபு தெரிவித்துள்ளார். இவர் எந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்ற விவரங்கள் தெரியவில்லை.