ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் அதே பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 16-ஆம் தேதி குண்டூரில் இருந்து ரூ.68 லட்சத்துடன் சென்னை சவுகார்பேட்டையில் நகை வாங்குவதற்காக விஸ்வநாதனிடம் வேலை செய்யும் ஊழியர்களான அலிகான் (25) மற்றும் சுபானி (25) ஆகியோர் வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் மீனம்பாக்கம் சாலையில் அவர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்து அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதனையடுத்து புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின் பெயரில் எம்.கே.பி நகர் போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் தனிப்படை போலீசார் கொல்லையர்கள் வந்த கார் டிரைவரான பத்துல வெங்கட நரசிம்மராவ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நகை கடை ஊழியர் சுபானியின் உறவினரான ஹைதராபாத் சேர்ந்த சையத் அப்துல் பாசி என்பவர் தான் இதற்குக் காரணம் எனவும் அவரது திட்டத்தின் படியே கார் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், அவரது கூட்டாளிகளான ஆந்திராவை சேர்ந்த மற்றொரு சுபானி, அஞ்சு பாபு, மகேஷ் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் டிரைவர் பத்துல வெங்கட நரசிம்மராவிடமிருந்து போலீசார் 7 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளான மற்ற நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.