மயிலாடுதுறையில் அதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார. இவர் தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் மற்றும் அதிமுக நிர்வாகி ஆவார். இவருடைய வீட்டிற்கு நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் திடீரென வந்தனர். வீட்டில் சோதனை செய்யப் போவதாகக் கூறி கதவை அடைத்துள்ளனர். பல்வேறு அறைகளில் சென்று வீடு முழுவதையும் சோதித்தனர். அதில் சில பார்சல்கள் மற்றும் ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி விட்டு அங்கிருந்து சென்றனர்.
அதேபோல் செம்பனார்கோவில் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், கிடங்கல் கிராமத்தில் வசித்து வரும் அதிமுக பிரமுகருமான ஜனார்த்தனம் மற்றும் பொறையாறு பகுதியில் வசித்து வரும் அதிமுக நிர்வாகி அருணாசலம் ஆகிய இருவருடைய வீடுகளிலும் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதிலும் பார்சல்கள் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்து விட்டு அங்கிருந்து சென்றனர். ஆனால் அந்த பார்சல்களில் என்ன இருந்தது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.