வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி. வருமான வரி தாக்கலை (Income Tax Return) எளிதாக்க, மின்னணு முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் ஜூன் மாதம் 7ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறையின் போர்டலான http://www.Incometax.Gov.In/ என்ற தளத்தில் சிக்கல்கள் உள்ளன.
இதன் காரணமாக வருமான வரித் துறை வழங்கும் ரீபண்ட் இந்த ஆண்டு தாமதமாகலாம். வருமான வரியின் இந்த புதிய போர்ட்டலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக, பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் இருக்கலாம். இந்த போர்டல் தொடங்கப்பட்டதிலிருந்து, சில சிக்கல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. இதனால் வரி செலுத்துவோரின் பணத்தை ரீபண்ட் செய்வதில் ஆகலாம்.
புதிய வருமான வரி போர்ட்டலில் தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பதால், பணத்தை ரீபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடும் என்பதோடு, விண்ணப்பதாரர்கள் வங்கி கடன், விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இது தவிர, சரிபார்ப்பு மற்றும் ஆய்வுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. முந்தைய ரிட்டன்களை அணுகுவதிலும் சிக்கல் உள்ளது. இதன் காரணமாக, வழக்கமான வேலைகளும் பாதிக்கப்படுகின்றன.
வருமான வரித் துறையின் இந்த புதிய போர்ட்டலில் வரும் சிக்கல்களால், வரி செலுத்துவோரைத் தவிர, தொழில் வல்லுநர்களும் கலக்கமடைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், போர்ட்டலின் குறைபாடுகளை நீக்கி, அமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மூத்த அதிகாரிகள் நிதியமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளனர். நிதியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.