2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் ( ஜூலை 31ஆம் தேதி) முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஜூலை 31ஆம் தேதிக்கு முன்னர் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது.கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியவர்கள் தொடர்பான விதிமுறைகளையும் வருமான வரித்துறை கழக சில மாதங்களில் மாற்றியமைத்துள்ளது.
அதனால் யாரெல்லாம் இன்றுக்குள் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.மேலும் இன்றுடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நிறைவடையும் நிலையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தாமதித்தால் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.1,000 ஆபராதம் என்றும் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக தாக்கல் செய்பவர்களுக்கு ரூ.5,000 அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்குட்பட்ட பொது நபர்கள் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்ட சீனியர் சிட்டிசன்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.
80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் சிட்டிசன்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு 25000 ரூபாய்க்கு மேல் TDS அல்லது TCS செலுத்துவோர் கட்டாயம் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.
சேமிப்புக் கணக்கில் ஒரு ஆண்டில் 50 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வருமானம் பெறுவோர், வெளிநாடுகளில் சொத்துகளை வைத்திருப்போர், ஒரே பில்லில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்தியோர், வெளிநாட்டு சுற்றுலாவுக்கு 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தவர்கள் என அனைவரும் கட்டாயமாக வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனிலேயே வருமான வரித் தாக்கல் செய்வது எப்படி?
- முதலில் https://incometaxindia.gov.in/Pages/default.aspx இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
- பிறகு உங்கள் பான் எண் வைத்து Log in செய்யவும்.
- உரிய ஆண்டின் (2021-22) கீழ் ‘Download’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- அதில் ITR-1 (Sahaj) படிவத்தை கிளிக் செய்யவும். உங்கள் படிவம் Excel வடிவில் டவுன்லோடு செய்யப்படும்.
- படிவத்தை திறந்து Form-16 படிவத்தில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- விவரங்களை கணக்கிட்டு Excel படிவத்தை ‘Save’ செய்யவும்.
- பிறகு இணையதளத்தில் ‘Submit Return’ ஆப்ஷனை கிளிக் செய்து Excel Sheetஐ அப்லோடு செய்யவும்.
- உங்களிடம் டிஜிட்டல் கையொப்பம் கேட்கப்படும்.
- தற்போது வருமான வரித் தாக்கல் முழுமையாக நிறைவேறியது என்ற செய்தி வரும்.
- இதற்கான Acknowledgement உங்கள் இமெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்.