வருகின்ற நிதியாண்டில் 7,500 குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் என அமைச்சர் தா.மோ அன்பரசன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது பெரம்பூர் தொகுதியில் பழுதடைந்துள்ள நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் குடியிருப்புகளை அகற்றி புதிய குடியிருப்பு கட்டித் தரவேண்டும் என்று திமுக உறுப்பினர் ஆர்.டி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரை தொடர்ந்து மற்றொரு திமுக உறுப்பினர் எழிலன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அன்பரசன் கூறிய பதிலில், “சிதிலம் அடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு மறுகட்டுமானம் செய்யும்போது அதிகப்படியான குடியிருப்புகள் கிடைக்கும்.
மேலும் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு உட்பட்ட வேறு எங்கும் சொந்த வீடு இல்லாத பொருளாதாரத்தில் நலிவுற்ற அதே பகுதியை சேர்ந்த குடும்பங்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்படும். மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைப்படி பங்களிப்பைச் செலுத்த முன்வரும் பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கி தரப்படும். மேலும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து, வல்லுநர் குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருந்தது. இதில் சென்னையில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் ஏனைய மாவட்டங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் மறுகட்டுமானம் செய்யப்பட வேண்டும் என வல்லுநர் குழு பரிந்துரைத்து இருக்கிறது.
இதில் நிகழ் நிதியாண்டில் 1,200 கோடி மதிப்பில் 7,500 குடியிருப்புகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இனி வரும் நிதியாண்டில் மேலும் 7500 குடியிருப்புகளுக்கு மேல் மறுகட்டுமானம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை பற்றி மறு கட்டுமானம் செய்து புதிய குடியிருப்புகள் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.