சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை வரும் 15ம்தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. கொரோனாவை முன்னிட்டு மண்டல, மகரவிளக்கு காலத்தில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால் மகர விளக்கு பூஜை தினத்தன்று மட்டும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது கொரோனா ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். தரிசனத்திற்கான முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். மகர விளக்கு பூஜைக்கான முன்பதிவு நேற்று முன்தினத்துடன் முடிந்தது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.