வருடம் தோறும் இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதை தங்கள் கடமையாகக் கருதுவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் 25ஆம் தேதி அன்று 12வது தேசிய வாக்காளர் தினம் வருவதை ஒட்டி “SVEEP Contest 2022″ என்ற தலைப்பில் நான்கு பிரிவுகளில் போட்டிகளை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதாவது, பள்ளி மாணவ, மாணவிகள்(9 முதல் 12 வரை), கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்), மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவ, மாணவிகள் ஆகிய நான்கு பிரிவுகளில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல், ஸ்லோகன் எழுதுதல், பாட்டுப் போட்டி, குழு நடனம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் ஆகியவை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் நடைபெறும்.
ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவம், 100 சதவீத வாக்காளராக பதிவு செய்தல், வாக்காளர் உதவி மைய கைபேசி செயலி, தூண்டுதல் இல்லாமல் வாக்களித்தல், வயது வந்தோர் வாக்காளராக பங்கெடுப்பு, ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு உள்ளிட்ட 6 தலைப்புகளில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 15 போட்டியாளர்களின் விவரம் மாவட்ட தேர்தல் அலுவலகம் மூலம் தலைமை தேர்தல் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.
மேலும் 18 வயது பூர்த்தியான பொதுமக்கள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தவறிய மாணவ, மாணவிகளுக்கு”ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு” என்ற தலைப்பில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம். இதற்காக elections.tn.gov.in/SVEEP2022/Account/Login என்ற இணையதள முகவரியில் வரும் 21 ஆம் தேதி வரை நேரடியாக கலந்து கொள்ளலாம்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேறிய தவறிய 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்திலுள்ள நபரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி இணையதளம் மூலமாக பங்கேற்கலாம். இவர்கள் பொதுப் பிரிவின் கீழ் வருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் வரும் 26 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சிறந்த 15 போட்டியாளர்களின் விவரங்கள் 31 க்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.