சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய்த்துறையினர் உளுந்தூர்பேட்டை சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளை கண்ட அந்த மினி லாரி ஓட்டுநர் லாரியை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து வருவாய்த் துறையினர் அந்த லாரியை சோதனை செய்தனர். அதில் அறநூறு கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின்னர் அதிகாரிகள் அந்த அரிசியை பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.