அண்ணாத்த படத்தை வரவேற்கும் வகையில் ஒரு புதிய பாடலை கவிஞர் அஸ்மின் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த பிரபல தமிழ் கவிஞரான அஸ்மின் கடந்த 2012-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான நான் படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் பல தமிழ் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியிருந்தார். இதுதவிர இவர் தனது யூடியூப் சேனல் மூலம் ஏராளமான தனியிசை பாடல்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது அஸ்மின் எழுதிய இரங்கல் கவிதையான ‘வானே இடிந்ததம்மா’ சோகப்பாடல் மக்களிடம் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தை வரவேற்கும் வகையில் அஸ்மின் ஒரு புதிய பாடலை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ‘வர்ராரு வர்ராரு அண்ணாத்த… நீ இனிமேலும் முடியாது ஏமாத்த’ என்ற இந்த பாடலை இலங்கையைச் சேர்ந்த கந்தப்பு ஜெயகாந்தன் இசையமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது .