மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தசாமி பாளையம் வடக்கு வீதி மதுரை வீரன் கோவில் பகுதியில் தூய்மை பணியாளரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிசங்கர்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் காங்கேயம் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் உணவு மற்றும் கேட்டரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று ஹரிசங்கர் விடுமுறை தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் சிலருடன் சிமெண்ட் ஓடு மாட்டும் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் 2 அடி உயரமுள்ள இரும்பு பேரலில் நின்று கொண்டு சிமெண்ட் ஓடு மாட்டி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஹரிசங்கரை மின்சாரம் தாக்கியது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஹரிசங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது மகனை வற்புறுத்தி வேலைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அஜாக்கிரதையாக இருந்ததால் எனது மகன் உயிரிழந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.