வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்துள்ளது. அதனால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் லட்சத்தீவு, மாலத்தீவு, குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.