மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் மீனவரான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஐயப்பன், ஆறுமுகம் உள்பட 6 பேர் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் பழவேற்காடு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகிலிருந்த வலையில் ஆறுமுகத்தின் கால் சிக்கியது. இதனால் நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்த ஆறுமுகம் மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆறுமுகத்தின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.