கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் இணைந்து தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிப்புதூர் காமாட்சி நகரில் தச்சுத் தொழிலாளியான நாராயணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராஜ்குமார் உள்பட 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நாராயணசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனை அறிந்த ராஜேஸ்வரி தனது கணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் கள்ளக்காதலை விடாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜ்குமாரின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நாராயணசாமி தனது கள்ளகாதலியுடன் வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரும் இணைந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு வீட்டிற்கு சென்று நாராயணசாமியை கண்டித்துள்ளனர். ஆனாலும் நாராயணசாமி மனைவி மற்றும் மகன் கூறுவதை கண்டுகொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த ராஜேஸ்வரியும், ராஜ்குமாரும் இணைந்து அரிவாளால் நாராயணசாமியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நாராயணசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணசாமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஸ்வரி மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.