வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த தலைமை காவலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே கடத்தூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வைரநாதன்(42) என்பவர் பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயலூர் கிராமத்தில் வசித்த கந்தசாமி, மாரப்பன் ஆகியோர் 13 சென்ட் இடத்தை வைரநாதனிடம் அடமானமாக வைத்துள்ளார்கள். இந்த 13 சென்ட் இடத்தை வைரநாதன் முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளார். இது குறித்து கந்தசாமி, மாரப்பன் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முதலமைச்சரின் தனிப்பிரிவிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்கு நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி நம்பியூர் காவல் நிலையத்தில் வைரநாதனை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வைரநாதன் இன்ஸ்பெக்டர் நிர்மலாவை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் தலைமை காவலர் வைரநாதன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து தலைமை காவலர் வைரநாதனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.