வழக்கை வாபஸ் வாங்க மறுத்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள அம்பேத்கர் நகரில் சிலம்பரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு உமா என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கொடுவாளை எடுத்து உமாவை வெட்ட முயன்றுள்ளார். இது குறித்து உமா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிலம்பரசனை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து உமா, சிலம்பரசனிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஜாமினில் வெளியே வந்த சிலம்பரசன் உமாவின் வீட்டிற்கு சென்று காவல் நிலையத்தில் தன் மீது கொடுத்த வழக்கை மீண்டும் வாபஸ் பெறுமாறு கூறிஉள்ளார்.
இதற்கு உமா மறுத்ததால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிலம்பரசன் அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து உமாவை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக உமாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உமா அளித்த புகாரின் அடிப்படையில் பேளுக்குறிச்சி காவல்துறையினர் சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.