சென்னையில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்ததாக ஆயிரம் விளக்கு மற்றும் மயிலாப்பூர் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். அதன்படி எம்ஜிஆர் நகர்,மார்க்கெட்டை சேர்ந்த நடராஜன், எழில் நகரை சேர்ந்த ஆகாஷ் கண்ணைய நகரைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 7 லட்ச ரூபாய் மதிப்பிலான 17 செல்போன்கள் ஆறு இரு சக்கர வாகனங்கள் ஆகியவை மீட்கப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் நடராஜன் மீது இருசக்கர வாகன திருட்டு வழிப்பறி உட்பட 10 வழக்குகளும் ஆகாஷ் மீது இருசக்கர வாகன திருட்டு வழிப்பறி உட்பட 7 வழக்குகளும் இருப்பது தெரியவந்தது. பின்னர் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நடராஜன், ஆகாஷ் சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.