பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை காவல் நிலையத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விமலா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நெட்டூர் கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரியை பார்ப்பதற்காக சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் நெட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே வழியை மறித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த சிலரை விமலா கண்டித்துள்ளார். அப்போது விமலாவை அந்த நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த விமலா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மாரியப்பன், முருகன், கண்ணன், வேல்முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து உடையாம்புளி பகுதியில் பதுங்கியிருந்த முருகன் மற்றும் வேல்முருகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மாரியப்பன் மற்றும் கண்ணனை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.