மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி திங்கட்கிழமை மாலை ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிந்தது. மதுரை காளவாசல் கோச்சடை வழியாக திருப்பூர் செல்வதற்காக காளவாசலை அடுத்த பாண்டியன் பல்பொருள் கூட்டுறவு அங்காடி முன்பு பேருந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர் விரைவாக செல்வதற்காக பலமுறை ஒலி எழுப்பியுள்ளார்
ஆனால், சாலை குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால் பேருந்து மெதுவாக சென்றதால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் சிறிது துாரத்தில், பேருந்தை முந்திச் சென்று காரை அதன் முன்னால் நிறுத்தியுள்ளார். பின்னர் காரில் இருந்து இறங்கி, கல்லால் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார்.
மேலும் காரில் இருந்து கம்பியை எடுத்து வந்து பேருந்து ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனைத் தாக்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இந்த தாக்குதல் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். ஓட்டுநர் தாக்கப்பட்ட தகவல் பரவிய உடன் அடுத்தடுத்து வந்த அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஒன்று கூடி காரை ஓட்டி வந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் காரை ஓட்டி வந்தவரைத் தாக்க முற்பட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஓட்டுநரைத் தாக்கிய நபரைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.
குறுகலான சாலையில் பேருந்து செல்ல முடியாத நிலையில் தனக்கு வழிவிடவில்லை என்ற ஆத்திரத்தில் ஓட்டுநரை அவர் தாக்கியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து, அவரது சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.