மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு மண்ணொளியம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ சதீஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாடி பகுதியில் இருக்கும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான துர்கா லட்சுமி(22( என்ற பெண் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஸ்ரீ சதீஷும், துர்காலட்சுமியும் மோட்டார் சைக்கிளில் வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி சாலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இதனை அடுத்து நெமிலிச்சேரி அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு கனமழை பெய்தது.
அப்போது முன்னால் சென்ற ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக சதீஷ் சடன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த துர்காலட்சுமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் சதீஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துர்கா லட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.