லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில், 13 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு சிலிக்கன் கல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மேகாலயாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை பிரசாந்த் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்று ஓட்டுனரான சூர்யா என்பவரும் உடன் இருந்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் இரட்டை பாலம் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி முன்னால் பிஸ்கட் பேரம் ஏற்று சென்ற கண்டைனர் லாரி மற்றும் ஆம்னி பேருந்து மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது. மேலும் பிஸ்கட் பாரம் ஏற்று சென்ற லாரி மற்றொரு சரக்கு வாகனம் மீது மோதி சாலையில் கவிழ்ந்துவிட்டது.
அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகளால் கண்டெய்னர் லாரி ஓட்டுனர் மாதேஸ்வரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிலிக்கன் கல்பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுனர் மற்றும் ஆம்னி பேருந்தில் வந்த பயணிகள் என மொத்தம் 13 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தால் அங்கு 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.