இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பால்பண்ணை ஊழியர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ஜெயஹிந்த்புரத்தில் முகமது அன்வர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்வர் இருசக்கர வாகனத்தில் திம்மிநாயக்கன்பட்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் தேனிக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது போடி மங்கலம் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனையடுத்து அன்வர் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதனைபார்த்த அப்பகுதியினர் அன்வரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அன்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போடி தாலுகா காவல்துறையினர் அன்வர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.