வாகனத்தில் சைடு கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறியதற்கு பயணியை கத்தியால் குத்தியுள்ளார் ஊபர் கால் டாக்ஸி ஓட்டும் ஓட்டுநர்.
டெல்லி காவல் துறையில் துணை ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர் ஜிதேந்தர் ரானா. இவர் கடந்த திங்கட்கிழமை டெல்லியின் ராஜீவ் கார்னரில் இருந்து மால்வியா நகரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்கு ஊபர் கால் டாக்ஸி ஒன்றை புக் செய்தார். பின்னர் காரில் தனது மனைவி மற்றும் மகளுடன் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். ஆனால் காரை ஓட்டிய ஓட்டுநர் ராஜ்குமார் சாலை விதிகளை பின்பற்றாமல் அதிவேகமாக இயக்கியுள்ளார். இதனால் ஓட்டுநர் குடிபோதையில் இருக்க வேண்டும் என்று கருதிய பயணி அவரிடம் வேகமாக ஓட்ட வேண்டாம் என்றும், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பிறகு ஓட்டுநர் சைடு கண்ணாடியை சரி செய்யும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து கோபப்பட்ட ஓட்டுனர் ” கார் ஓட்டுவது குறித்து நீ எனக்கு பாடம் எடுக்கிறாயா”..? என்று கூறி காரை நிறுத்திவிட்டு அனைவரையும் இறங்க கூறியுள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த கத்தியால் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை சரமாரியாக வயிற்றில் குத்தி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை பிடிக்க முற்பட்ட போது அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சம்பவ இடத்தில் மயக்கமடைந்த காவல் அதிகாரியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.