நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் (ரூ.2.48), டீசல் (ரூ.1.16), மீதான வாட் வரியை குறைத்து மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
மத்திய அரசு நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை கணிசமாக குறைத்த நிலையில் மாநில அரசுகளும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக முதல் மாநிலமாக கேரளா வாட் வரியை குறைத்து உத்தரவிட்டது. அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலம் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் வாட் வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.