தமிழகத்தில் பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட் என்பது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தான் உள்ளது. நம்பர் பிளேட்டில் தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது தெய்வப் படங்கள் என பல புகைப்படங்கள் பதிவு எண்ணை விட பெரிதாக பதிவிடப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக உள்ளதாக கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழகத்தில் வாகன ஓட்டுனர்கள் தங்களின் நம்பர் பிளேட்டில் விருப்பத்திற்கு ஏற்ப புகைப்படங்களை மிகவும் பெரிதாகவும் பதிவு எண்ணை சிறியதாகவும் பதிவு செய்கின்றனர்.
இதனை போக்குவரத்து அலுவலர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். அதே சமயம் மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனங்களில் நம்பர் பிளேட் இடம் பெற்று இருக்க வேண்டும் எனவும் மற்ற விவரங்கள் இடம்பெறக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.