மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
சென்னை ஆர்க்காடு சாலையில் நடைபெறும் போரூர் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகளை முன்னிட்டு லட்சுமி நகர் முதல் போரூர் மேம்பால சந்திப்பு வரை நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக ஏற்கனவே சோதனை முறையில் அமலில் உள்ள போக்குவரத்து மாற்றம் மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கும். அதாவது வரும் வரும் 14ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போன்றோர் மெட்ரோ ரயில் பாதை பணியினை விரைவில் முடிக்க முழு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில் மாதவரம், சி.எம்.பி.டி. சோலிங்கநல்லூர் இடையே 47 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. அதனால் மெட்ரோ ரயில் பாதை மற்றும் நிலையங்கள் அமைக்கும் பணிக்காக கோயம்பேடு காளியம்மன் கோவில் சாலையில் தற்காலிகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் சி.எம்.பி.டி., தானிய சந்தை, சாய்நகர் பஸ் நிறுத்தம் இடையே, மெட்ரோ பாதை மற்றும் நிலைய கட்டுமான பணி நடைபெற உள்ளன. இதன் காரணமாக சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, காளியம்மன் கோவில் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு தற்காலிக தடுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இதன்பின்னர், மெட்ரோ பணி ஒப்பந்ததாரர்களால், சாலையில் தற்காலிக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் துவக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.இதனிடையில் , சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டையில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது இயங்கி கொண்டிருக்கிறது.
இந்த வழித்தடத்தில் திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய இரு மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.மேலும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.