சென்னை கிண்டியில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் இரண்டு நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பரங்கிமலை போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட கிண்டி ஜிஎஸ்டி சாலையில் ஓட்டல் ஹாப்ளிஸ் அருகில் உள் செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்க பணி இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை நடைபெறுகிறது.
அப்போது அந்தச் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ஜிஎஸ்டி சாலையில் விமான நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தின் மேலே நேராக சென்று சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வீ.க. தொழில் சாலை வழியாக கிண்டி பஸ் நிலைய வந்து அண்ணாச்சாலை சென்றடையலாம். அதனைத் தொடர்ந்து பூந்தமல்லி இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் எதுவும் இன்றி வழக்கமான சாலையில் கத்திப்பாரா வழியாக செல்லலாம். அதனைப் போல வடபழனியிலிருந்து வரும் வாகனங்கள் 100 அடி சாலை சிப்பெட் சந்திப்பில் இடது புறம் திரும்பி திரு.வீ.க. தொழிற் பேட்டை சாலை வழியாக கிண்டி பஸ் நிலையம் வந்து அண்ணாமலை சென்றடையலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.