5 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்காளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜா மில் ரோட்டில் இருக்கும் புனித லூர்து மாதா பள்ளி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் 45 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதால் மாலை 5.45 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சிலர் மாலை 5 மணிக்கு மேல் வாக்களிப்பதற்காக சென்றுள்ளனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் வாக்குப்பதிவு நேரம் முடிந்து விட்டதால் உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறி நுழைவு வாயிலை மூடி விட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர்கள் கோட்டூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.