பொதுமக்கள் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் பாரைக்கால்மடம் என்ற ஊர் உள்ளது. இது 26 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்நிலையில் இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் சிலர் வசித்து வந்துள்ளனர். அதன்பின்னர் அந்தப் பகுதிகளிலிருந்து பால்குளத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நாகர்கோவிலில் இருக்கும் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் வாக்களிப்பதற்காக பள்ளிக்கு சென்றுள்ளனர்.
ஆனால் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த பொது மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் தேர்தல் அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் கோபமடைந்த ஆக்கிரமிப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இங்கு பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் பட்டியல் பால்நகர் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் நீங்கள் அனைவரும் அங்கு சென்று வாக்களிக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனையடுத்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.