திண்டுக்கல்லில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அச்சுதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடைபெற்றது. இந்த கோலப்போட்டி ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்தக் கோல போட்டியில் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
வாக்காளர்கள் உரிமை மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில் பெண்கள் ரங்கோலி கோலங்கள் போட்டு அசத்தினர். அந்த கோலங்களை தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஜயலட்சுமி பார்வையிட்டார். இதையடுத்து கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மகளிர் திட்ட அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி.ஓ. காசிசெல்வி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.