பாஜகவினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கோவையிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
வாக்கு சாவடியில் வைத்து டோக்கன் வழங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பாஜகவினரை காங்கிரஸ் கட்சியினர் மடக்கிப் பிடித்துள்ளனர். ஆனால் டோக்கன் வழங்கியவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டும் தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இதனால் பாஜகவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியலில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தேர்தல் அதிகாரிகள் பாஜகவுக்கு துணை போவதாக குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.