வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது தொடர்பாக சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.
அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதுமட்டுமன்றி தேர்தல் நடத்துவதற்கான விதிகளை அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் நடத்துவதற்கான பணி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், அந்த முகவரியில் இருந்த அனைத்து வாக்காளர்கள் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பெயரும் அந்த முகவரியில் இருந்ததால், அவரது பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
தற்போது தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சசிகலா, அந்த முகவரியில் இருந்து வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லையெனவும், எனவே அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது கேள்விக்குறியாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது தொடர்பாக சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.