மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதார் அட்டை எண்ணுடன் வாக்காளர் பட்டியலை இணைப்பது தொடர்பான பணிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த பணிகளை 2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆகஸ்ட் 1-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் வைத்து ஆலோசனை நடத்துவார். இதற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹூ தலைமை தாங்குவார். இதனையடுத்து மாவட்டங்களில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமை தாங்குவார்.
அதன் பிறகு வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைக்கும் மாபெரும் பணிக்கு அரசியல் கட்சிகளின் முழு ஒத்துழைப்பும் வேண்டும் என்பதால், ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக மாநில தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். இந்த கூட்டத்தின் போது வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்த பணிகள் மற்றும் புதிய பெயர்கள் சேர்க்கும் பணிகள் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படும். மேலும் வாக்காளர் பட்டியலில் ஜனவரி 1-ஆம் தேதி அன்று 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.