வேன் மோதிய விபத்தில் வாக்கிங் சென்று கொண்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகில் சாலை நயினார் பள்ளிவாசல் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரனான சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வி தினந்தோறும் சாலை நயினார் பள்ளிவாசல் களக்காடு ரோட்டில் வாக்கிங் செல்வது வழக்கம்.
அதைப்போல் நேற்று காலை செல்வி வாக்கிங் சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியாக வேகமாக சென்ற வேன் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநரனான நாகர்கோவில் சேர்ந்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.