தேர்தல் எண்ணிகையில் முறைகேடு நடந்ததாக கூறி 2 கிராமத்து மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கோ.மருதப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடந்த 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12-ஆம் தேதி நடந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி சண்முகநல்லூர் மெயின் ரோடு ஓரத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஜயலட்சுமியின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் சண்முகநல்லூர் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது விஜயலட்சுமி கோ.மருதப்பபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தான் போட்டியிட்டதாகவும், தனக்கு 352 வாக்குகள் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். அதன்பின் தன்னை விட குறைவான வாக்குகள் பெற்ற ஒருவரை வெற்றி பெற்றவராக அறிவித்ததால் அவர் பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் நான் தீக்குளிப்பேன் என்றும் விஜயலட்சுமி உண்ணாவிரத போராட்டத்தில் கூறியுள்ளார்.