தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 மாநகராட்சிகள், 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் என மொத்தம் 51 பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 196 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் லிட்டில் ஃப்ளவர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களின் ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை 3 சுழற்சிகளாக நடைபெறவுள்ளது. எனவே ஆயுதமேந்திய காவல்துறையினர் வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.