தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் குருபரன், ரவி ஆகியோருக்கு ஆதரவாக மூவாநல்லூர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் அக்டோபர் 1 முதல் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் கொள்முதலுக்கு புதிய விலை கிடைக்கும். அதை வாங்குவதற்கு விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை சாத்தியமில்லாதது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழக அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுகவினர் மட்டுமல்லாமல் கழகத்தின் சார்பாகவும் பலர் பங்கேற்றனர்.
கூட்டம் நடைபெற்ற இடத்தில் அதிமுக அமமுக கட்சி கொடிகள் இரண்டுமே கட்டப்பட்டிருந்தது. அதிமுக ஊராட்சி மன்ற வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுக மற்றும் அதிமுகவினர் இணைந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரனுக்கு இடமில்லை என்று கூறிவரும் நிலையில் திருவாரூரில் இரண்டு கட்சி உறுப்பினர்களும் இணைந்து பிரசாரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.