மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது,
சென்ற 22/9/2016 அன்று மாலையில் இருந்து அக்கா ஜெயலலிதா மிகவும் சோர்வாக இருந்து வந்தார். இதனால் நான் மிகவும் கவலையில் இருந்தேன். ஏனெனில் அக்கா ஒருபோதும் அந்த அளவுக்கு சோர்வடைந்தது இல்லை. இதையடுத்து அக்கா மருத்துவமனைக்கு வாங்க போகலாம் என்று கூறினேன். ஆனால் அக்கா நான் தூங்கினால் சரியாகிவிடும்.
மருத்துவமனைக்கு போனால் அட்மிட் ஆக கூறுவார்கள். இதனால் அங்கு செல்ல வேண்டாம் என்று என்னிடம் அக்கா கோபமாக கூறினார். நான் எவ்வளவோ கேட்டும் கூட அக்கா ஒத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் அக்காவுக்கு காய்ச்சலும் குறைந்து விட்டது. அதன்பின் அக்காவை பார்க்க டாக்டர் சிவக்குமார் இரவு போயஸ் தோட்டத்திற்கு சுமார் 9 மணி அளவில் வந்தார் என்று சசிகலா வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.