அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டுவது என முதல்வர் துணை முதல்வர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடத்துகின்றனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியில் இருந்து நேற்று பரப்புரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுக்கூட்டம் இன்னும் கூட்டப்படவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.
மேலும் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். எனவே பொதுக்குழுவை எப்போது கூட்டுவது ? என்பது பற்றி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.