நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளது. அதாவது வாடகைத்தாய் வாயிலாக இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக வெளியான தகவல் சர்ச்சையாகி இருக்கிறது. இந்தியாவில் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறை தடைசெய்யப்பட்டுள்ளது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள சில சட்டவிதிகள் இருக்கிறது. அதாவது, தம்பதியினர் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற தகுதிச்சான்றுகள் தாக்கல் செய்ய வேண்டும். திருமணமாகி 5 வருடங்கள் ஆன பிறகும் குழந்தை இன்றி இருக்க வேண்டும்.
அத்துடன் தம்பதியினரில் மனைவியின் வயது 25 -50 ஆகவும், கணவரின் வயது 26 -55 ஆகவும் இருக்க வேண்டும். தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் யாரும் இருக்கக்கூடாது. இவற்றில் மனநிலை மாற்றுத்திறனாளி, நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருந்தால் விதிவிலக்கு உண்டு. தம்பதியரில் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்ள தகுதியில்லை என்பதற்கான சான்றினை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருக்கிறது. இவ்விதிமுறைகளை நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் மீறினார்களா எனும் கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டநிபுணர்கள் தரப்பில் கூறியதாவது, ”வாடகைத்தாய் சட்ட அறிவிப்பு ஜனவரி 25-ஆம் தேதிக்கு பின் வந்தது. எனினும் சட்ட விதிகள் ஜூன் 26-ம் தேதி தான் நடைமுறைக்கு வந்தது. நயன்தாரா வாடகைத்தாய் குழந்தை பெற ஜனவரி மாதத்துக்கு முன்பே பதிவு செய்திருப்பார். ஆகவே வாடகைத்தாய் சட்டத்தால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பாதிப்பு வராது. இவற்றில் சட்ட மீறல் நடக்கவில்லை” என தெரிவித்தனர்.