வால்பாறையில் வாடகை செலுத்தாத 40 கடைகளை அதிகாரிகள் சீல் வைத்தனர் .
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் 350 கடைகள் நகராட்சிக்கு சொந்தமானது. இந்த கடைகள் அனைத்தும் மாதம்தோறும் தவறாமல் வாடகை செலுத்த வேண்டும். ஆனால் பல கடைகள் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளது. இந்நிலையில் வாடகை செலுத்தாதவர்களிடம் நகராட்சி நிர்வாகம் வாடகை செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதை அடுத்து 200க்கும் அதிகமான கடைக்காரர்கள் வாடகை செலுத்தியுள்ளார்கள். ஆனால் 100 கடைகள் வாடகை செலுத்தவில்லை. அதனால் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சென்று சீல் வைத்தனர்.
அப்போது சில கடைக்காரர்கள் வாடகை செலுத்துவதில் பல்வேறு பிரச்சினை இருப்பதாகவும் அதை சரி செய்து கொடுத்தால் தான் நாங்கள் வாடகை செலுத்துவோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து கடை வாடகை உடனே செலுத்துங்கள் என்று கூறிவிட்டு ஆணையர் சென்றுள்ளார்.
இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது, வால்பாறை நகராட்சியில் மொத்தம் 100 கடைகள் வாடகை செலுத்தவில்லை. அதில் 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மீதி இருக்கிற கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்படும். சிலர் வாடகை செலுத்த கால அவகாசம் கேட்டுள்ளனர். காலஅவகாசம் ஏற்கனவே அதிகமாக வழங்கப்பட்டதால் வாடகையை உடனடியாக செலுத்த வேண்டும் இல்லை என்றால் சீல் வைக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.