நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் 332 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மேலும் சொத்து வரி, குடிநீர், காலியிட வரி மற்றும் கடைகளுக்கும் வாடகை வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களாக பல கடைகளில் வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே ஒரு வார காலத்திற்குள் வாடகை செலுத்தாத கடையினர் வாடகை பாக்கி மற்றும் நிலுவை வரித்தொகையை செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளர் கனேசன் ஏற்கனவே கூறியுள்ளார்.
மேலும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பதுடன், அவர்களது வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கோபி தலைமையில் அதிகாரிகள் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது சிலர் ஒருநாள் அவகாசம் கேட்டதால் அவர்களை எச்சரித்துள்ளனர். மேலும் அதிக அளவில் வாடகை பாக்கி வைத்திருந்த 6 கடைகளை பூட்டி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.