சமூக வலைத்தளங்களில் வைரலாகும் லிங்கை நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீஸ்காரர் ஒருவர் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையினர் ஆடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்றைய காலத்தில் வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உட்பட பல சமூக வலைத்தளங்கள் இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது, அனைத்து வயதினரையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளன.
சமூக வலைதளங்களின் மூலமாக பரவும் ஆடியோ, வீடியோஸ், செய்திகள் அனைத்தும் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் சில மர்ம நபர்கள் அதை தவறாக பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் தினமும் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு பிரபலமான தனியார் நிறுவனம் பெயரில் கிளை திறப்புவிழா பரிசு என்ற தலைப்பில் ஒரு லிங்க் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
அந்த லிங்கை திறந்து பார்த்தபோது அதில் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அந்த நான்கு கேள்விகளுக்கும் பதிலளித்தால் ரூ 6,000 பெற வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த லிங்கை பார்த்தவர்கள் வாட்ஸ்அப்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உறவினர், நண்பர்களுக்கு அதை அனுப்பி வருகிறார்கள். ஆனால் அது உண்மையான தகவல் இல்லை என்பது யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில் அந்த லிங்க் குறித்து காவல்துறையினர் ஒருவர் ஆடியோவாக பதிவு செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பி உள்ளார். அதில் இதுபோன்ற லிங்கை 20 பேருக்கு அனுப்பினாலும் கேள்விகளுக்கு பதிலளித்தாலும் பரிசு என்று கூறப்பட்டது. ஆனால் அந்த லிங்க் மூலமாக யாருக்கும் எந்த பரிசும் கிடைப்பதில்லை. மேலும் அந்த லிங்கை திறந்து பார்த்தால் அதில் உங்கள் செல்போனில் உள்ள தனிப்பட்ட போட்டோ, வீடியோ, செய்திகள் அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு உங்களை மிரட்டி பணம் பறிக்க முடியும்.
ஆதலால் இலவசம், பரிசு என்று எந்த லிங்கையும் பொதுமக்கள் திறந்து பார்க்காதீர்கள். மேலும் அதை மற்றவர்களுக்கும் அனுப்பாதீர்கள் என்று காவல்துறையினர் அந்த ஆடியோவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகின்றது. ஆனால் எது எப்படி இருந்தாலும் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஏற்படும் நன்மை, தீமை எதுவாக இருந்தாலும் நாம் பயன்படுத்துவதைப் பொறுத்து இருக்கின்றது.