நாடு முழுவதும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், பணப்பரிமாற்ற விவரங்கள், இருப்பிட விவரங்கள், அவர்கள் வைத்துள்ள தொடர்பு எண் தகவல்களை பெறும் வாட்ஸ்அப் அவற்றை எந்த நோக்கத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என வணிகர்கள் கூட்டமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் தகவல்களை பறிக்கும் புதிய கொள்கையை கைவிட வேண்டும் என வாட்ஸ்அப்புக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அல்லது வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் புதிய கொள்கை தனி நபர்களுக்கு மட்டுமல்லாமல் தேசப்பாதுகாப்புக்கே ஆபத்தாகவும் மாறக் கூடாது என்றும் வணிகர்கள் கூட்டமைப்பு தன் கடிதத்தில் எச்சரித்துள்ளது.