மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கிவரும் வாட்ஸ்அப் உலகம் முழுதும் மிகவும் பிரபலமான செய்தி பரிமாறும் செயலியாக இருக்கிறது. பயனாளர்களுக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும் அடிப்படையில் புது அம்சங்களை வாட்ஸ்அப் தொடர்ந்து கொண்டுவருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ்அப் மெசேஜ்களை எடிட்செய்யும் வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதுகுறித்து WABetaInfo அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆண்ட்ராய்டு பீட்டாவிற்குரிய வாட்ஸ்அப்-ல் செய்திகளைத் திருத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இப்போது சோதனைக் கட்டத்தில் இந்த வசதி இருப்பதாகவும், பீட்டா பயனாளர்களுக்கு கூட இன்னும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப்-ல் செய்திகளை எடிட்செய்யும் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பான 2.22.20.12 ல் வெளியிடப்படும்.
செய்திகளை அனுப்பிய பின் எவ்வளவு விரைவில் (அல்லது) எப்போது எடிட்செய்ய முடியும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அத்துடன் வாட்ஸ்அப் தளத்தில் வணிக செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் வாட்ஸ்அப் சேல்ஸ்போர்ஸுடன் ( Salesforce) ஒப்பந்தம் செய்துள்ளது என தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்து இருக்கிறார். இதன் வாயிலாக வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நேரடியாக Chats மூலமாக விற்பனை செய்யவும் வழிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.