Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப்பில் குழு அமைத்து கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை… பட்டதாரி பெண் உட்பட 6 பேர் கைது… காவல்துறை அதிரடி…!!

சென்னையில் வாட்ஸ்அப் குழு அமைத்து கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரையை விற்ற பட்டதாரி பெண் உட்பட ஆறு பேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாநகரில் போதை மாத்திரைகளை வெளிமாநிலங்களில் இருந்து கூரியர்  மூலம் கடத்தி விற்பனை செய்யும் கும்பல் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இந்தக் கும்பல் வலி நிவாரணி மாத்திரை என்ற பெயரில் போதை மாத்திரைகளை விற்பதாக தெரிந்தது. மேலும் சட்டவிரோதமாக மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் வாட்ஸ் அப்பில் குழு அமைத்து அதன்மூலம் போதை மாத்திரைகளை சப்ளை செய்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது.

எனவே இவர்களை பற்றிய முழு விவரங்களையும் காவல்துறையினர் ரகசியமாக சேகரித்து வருகின்றனர். இந்த கும்பலை கூண்டோடு கைது செய்ய கமிஷனர் சங்கர் ஜிவால் தனிப்படை அமைத்து இவர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்தப் போதை மாத்திரை விற்பனை கோடம்பாக்கம் பகுதியில் அதிகமாக விற்கப்படுவதாக தகவல் வந்தது. இத்தகவலின்பேரில் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது மோட்டார் வாகனத்தில் சந்தேகப்படும்படி 2 நபர்கள் வந்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர்கள் வைத்திருந்த பையில் அதிக போதை தரக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகள் நைட்ரவிட், டைடல் ஆகியன நிறைய இருந்தன. இதையடுத்து அசோக் நகர் பகுதியை சேர்ந்த 23 வயதான கிஷோர், கே.கே நகர் பகுதியை சேர்ந்த 20 வயதான கிஷோர் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து மோட்டார் வாகனத்தையும், மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை கொத்தவால் சாவடியை சேர்ந்த 26 வயதான பூங்குன்றன், ராஜபாளையத்தை  சேர்ந்த 23 வயதான முத்துப்பாண்டி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டை  சேர்ந்த 24 வயதான கோகுலன், பூந்தமல்லியை  சேர்ந்த 22 வயதான ராஜலட்சுமி ஆகிய 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 4620 நைட்ரேட் மாத்திரைகள், 2220 டைடல் மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்புக்கு பயன்படும் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த கும்பலிடம் இருந்து  ரூ.4.41 லட்சம் ரொக்கப் பணம், இரண்டு லேப்டாப்கள், 9 செல்போன்கள், 3 மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் கைது பறிமுதல் செய்தனர். கைதான ராஜலட்சுமி பட்டதாரி பெண். இவர்தான் இந்த போதை மாத்திரை விற்பதற்கு தலைவியாக செயல்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தக் கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Categories

Tech |