காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சென்னைக்கு வந்த பிரபு ஒரு தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கிடையில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பிரபு வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரபுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரபு காதலித்த பெண் கடந்த மாதம் இறந்துவிட்டார். இதனால் துக்கம் தாங்காமல் வேலை தேடி சென்னை செல்வதாக கூறிவிட்டு விடுதியில் அறை எடுத்து பிரபு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.